Delhi MCD Election: டெல்லி மாநகராட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி

புதுடெல்லி: Historic win for AAP in Delhi civic polls. டெல்லி மாநகராட்சி தேர்தலில் 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் 4-ம் தேதி டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது, சுமார் 50 சதவீத வாக்குகள் பதிவாகி மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெறும். காங்கிரசுக்கு சொற்ப இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளதாக என்று கணிக்கப்பட்டது.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டியாக கருதப்பட்டது. இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்காக டெல்லி முழுவதும் 42 வாக்கு எண்ணும் மையங்களை ஆணையம் அமைத்துள்ளது. 68 தேர்தல் பார்வையாளர்கள் ஆணையத்தால் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மேற்பார்வையின் கீழ் வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் கவனிப்பதற்காக இந்த வாக்கு எண்ணும் மையங்களில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (ECIL) 136 பொறியாளர்களையும் ஆணையம் நியமித்துள்ளது.

இந்த 42 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள எல்இடி திரைகளில் ஆணையத்தின் இணையதள போர்ட்டலில் நேரடி முடிவுகளைப் பார்ப்பதற்கு வசதியாக சிறப்பு ஊடக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி 136 இடங்களிலும், பாஜக 100 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு 126 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.