Cargo Terminal in the Great Nicobar: ரூ.75000 கோடியில் கிரேட் நிக்கோபாரில் சரக்குப் பெட்டக முனையம்

போர்ட் பிளேயர்: ரூ.75000 கோடியில் கிரேட் நிக்கோபாரில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக (கண்டெய்னர்) முனையம் அமைக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்திற்குட்பட்ட மாயாபந்தரில் நவீன மீன்பிடித் தளம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தானப்பூர் கிராமத்தில் உள்ள மீனவர்களுடன் அமைச்சர் முருகன் இன்று கலந்துரையாடினார். அப்போது அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள ஐஸ் உற்பத்தி மையத்தை மேம்படுத்த வேண்டும். மீன்பிடித் தளத்தை புதிதாக அமைக்க வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும், மீன்வளர்ப்புக்கான குட்டைகள் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

இதைக் கேட்டறிந்த பின் மீனவர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், மாயாபந்தரில் நவீன மீன்பிடித் தளம் அமைக்கப்படும் என்றார். மேலும் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், இந்தத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உடனடியாக முகாம்களை நடத்த வேண்டும் என துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குத் தேவைப்படும் படகுகளை மீனவர்கள் வாங்க மகளிருக்கு 60, ஆண்களுக்கு 40 சதவீதம் மானியம் மற்றும் எஞ்சியத் தொகைக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றும், அதன் அடிப்படையில் அந்தமானில் 7 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து மீனவர்களுடன் அமர்ந்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டறிந்தார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினத்தை ஒட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர் முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Union Minister of State for Information & Broadcasting, Fisheries, Animal Husbandry and Dairying Dr. L Murugan said that a cargo terminal will be set up at a cost of Rs 75000 crore in Campbellbay in the Great Nicobar Islands.