Aam Aadmi VS BJP : ஆம் ஆத்மி, பாஜக மோதல்: சட்டப்பேரவையின் உள்ளே, வெளியே தர்னா போராட்டம்

சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்த பின்னர், அவை விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். பின்னர் நடந்த விவாதத்தின் போது தில்லி முதல்வர் பாஜகவை கடுமையாக சாடினார்.

புதுதில்லி: Aam Aadmi VS BJP : தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. தில்லி சட்டப் பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் ஊழல் குற்றம் சாட்டி ஒரு மணி நேரம் தர்னா போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தலா ரூ. 20 கோடி கொடுத்து விலைக்கு வாங்க பாஜக முன்வந்துள்ளது, இதன் மூலம் தில்லி அரசை கவிழ்க்க முயற்சிக்கிறது. இது தொடர்பாக‌ குற்றம் சாட்டிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு பெரும்பான்மை இருந்தும் பாஜகவை எதிர்கொள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.

பேரவையில் நேற்று நம்பிக்கை தீர்மானத்தை (Confidence resolution) தாக்கல் செய்த பின்னர், அவை விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். பின்னர் நடந்த விவாதத்தின் போது தில்லி முதல்வர் பாஜகவை கடுமையாக சாடினார். பாஜகவின் ஆபரேஷன் கமலா திட்டம் தோல்வி அடைந்துள்ளது. பாஜகவின் கவர்ச்சிக்கு எங்கள் எம்எல்ஏக்கள் யாரும் பலியாகவில்லை என சட்டப் பேரவையில் பேசினார்.

விவாதத்தின் போது, ​​துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Deputy Chief Minister Manish Sisodia) பதவி விலகக் கோரி பாஜக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ​​விவாதம் பாதியில் நிறுத்தப்பட்டதால், ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், தில்லி லெப்டினன்ட் கவர்னர் மீது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா (Delhi Lieutenant Governor VK Saxena) 2016 ஆம் ஆண்டு கேவிஐசி காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது ரூ. 1,400 கோடி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியதாக குற்றம் சாட்டினர். இதனால், லெப்டினன்ட் கவர்னர், பதவியில் இருந்து விலகக் கோரி போராட்டம் நடத்தினார். மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி பாஜக போராட்டம் நடத்தியது. அமளி அதிகரித்ததால், சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சட்டசபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

எனினும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் கோபம் தணியாததால், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவைக்கு வெளியே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் பாஜக எம்எல்ஏக்களும் ஒரு மணி நேரம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 11 மணிக்கு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி- பாஜக மோதலால் தில்லி அரசியல் பரபரப்பாக (Delhi politics is exciting) உள்ளது.