AAI signs MoU with Sweden: நவீன விமானவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு; ஸ்வீடனுடன் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்பந்தம்

புதுடெல்லி: AAI signs MoU with Sweden to facilitate smart and sustainable aviation technology collaboration: நவீன மற்றும் நீடித்த விமானவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்வீடனுடன் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கையெழுத்திட்டுள்ளது

புதுதில்லியில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், ஸ்வீடன் நாட்டின் வான் போக்குவரத்து சேவை அமைப்பான எல்.எஃப்.வி. நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதிநவீன விமானப் போக்குவரத்துக்கான தீர்வுகளை கண்டறிய ஏதுவாக, அடுத்த தலைமுறை நீடித்த விமானப் போக்குவரத்து தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதனை செயல்படுத்துவதற்காக, இந்தியா மற்றும் ஸ்வீடன் நாட்டின் விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களை இந்த உடன்படிக்கை ஒன்றிணைத்துள்ளது. இரு நாடுகளிடையே விமானப் போக்குவரத்து சார்ந்த நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை இருதரப்பும் பகிர்ந்துகொள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும். ஸ்விடனின் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் நிபுணத்துவத்தை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தி வளர்ச்சியை விரைவுபடுத்தவும் இது உதவும். இந்த ஒப்பந்தத்தின்படி, பரஸ்பர நலன்சார்ந்த துறைகளில் தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் உறுப்பினர் (விமானப் போக்குவரத்து சேவைகள்) எம். சுரேஷ் மற்றும் ஸ்வீடன் நாட்டின் எல்.எஃப்.வி. நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் மேக்னஸ் கோரல் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர்சஞ்சீவ் குமார், ஸ்வீடன் நாட்டின் கட்டமைப்பு அமைச்சக செயலாளர் மலின் செடர்ஃபெல்ட் ஓஸ்ட்பெர்க், இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் கிளாஸ் மோலின், ஸ்வீடனுக்கான இந்திய தூதர்தன்மயாலால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர்.

விமான போக்குவரத்து மேலாண்மை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தொலைதூர விமான நிலைய மேலாண்மை மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு, வான்வெளி வடிவமைப்பு மற்றும் திட்டமிடல், விமான நிலைய வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து, திறன் மற்றும் பயிற்சி, நிலையான விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து, விமானிகளுக்கான செயல்முறைகள், அளவை அதிகரிப்பதற்கான செயல்முறைகள் உள்ளிட்ட 10 துறைகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், ஸ்வீடன் நாட்டின் எல்.எஃப்.வி. நிறுவனம் ஆகியவை கூட்டாக ஒத்துழைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.