Fake Currency Seized: வெளியில் நிதி நிறுவனம், உள்ளே கள்ளநோட்டு அச்சடிப்பு: பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள (Fake Currency Seized) சித்தாபுரா பகுதியில் நல்லக்கனி 53, என்பவர் நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவருடன் சுப்பிரமணியன் என்பவர் ஆடிட்டராக இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதி மக்களிடம் குறைந்த வட்டியில் பணம் தருவதாகவும், நகைக்கடன் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சித்தாபுரா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனிடையே பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக காரில் சிலர் வருவதாகவும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அத்திப்பள்ளி பகுதியில் போலீசார் சில வாகனங்களில் சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் ஒரு காரில் கத்தை, கத்தையாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டுப்பிடித்தனர். அதில் ஒரு கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்துக்கு கள்ள நோட்டுகள் இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சித்தாபுராவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த நல்லக்கனி 55, சுப்பிரமணியன், அஜய்சிங் 48 என்பதும், இவர்கள் தமிழ்நாடு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நிதி நிறுவனத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து அங்கு வரும் மக்களிடம் விநியோகம் செய்துள்ளதும் தெரியவந்தது.

மேலும் கள்ள நோட்டுகளை பெற்று செல்லும் மக்கள், திரும்ப செலுத்தும்போது நல்ல நோட்டுகளை கொடுப்பார்கள். இதனால் கள்ள நோட்டுகளை எளிதாக நல்ல நோட்டுகளாக மாற்றலாம் என்பதால் இதுபோன்று செய்ததாக ஒப்புக்கொண்டனர்.