Special vaccination camp : நாளை தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்

Image Credit : Twitter.

சென்னை: Special vaccination camp in Tamil Nadu : தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுவரை 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள். 2 தவணை செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் கடந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதாவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். தற்போது 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே முகாமின் பயனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாமில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படும். எனவே அன்று எங்கும் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது. அன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் இரண்டாம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தடுப்பூசி பணி 2021-ஆம் ஆண்டு ஜன. 16-ஆம் தேதி தொடங்கியது.

தற்போது 12-வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.