TNPSC Important Notification Release: 1,754 பணியிடங்கள் மட்டுமே.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை: ஆண்டு முழுவதும் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளன என சமூக ஊடகங்களிலும் சில பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்தி குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிட்டதில். ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளன என சமூக ஊடகங்களிலும் சில பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது.

ஊடகங்களில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லாததால், தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் நிலையில், அவற்றை மறுத்து, பின்வரும் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலிருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணையாகும். இது தொடர்ந்து கூடுதல் பணியிடங்களுக்கான கேட்புகள் பெறப்படப்பட அட்டவணையில் சேர்த்து வெளியிடப்படும்.

இது மட்டுமன்றி, அரசுப் பணியிடங்களுக்கான மற்ற தெரிவு முகமைகளான ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மற்றும் வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவற்றின் வாயிலாகவும் அரசுப் பணியிடங்களுக்கான தெரிவுகள் ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாரியங்கள் தவிர, அரசு வேலை வாய்ப்பகங்கள் வாயிலாகவும் செய்தித் தாள்களில் உரிய விளம்பரம் செய்யப்பட்டும் பல்வேறு அரசுப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

இவை தவிர, பணிக்காலத்தில் அகால மரணமடையும் அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் குறிப்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், மொத்தம் 1,063 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,12,551 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில்வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு செய்து, அவற்றை முறையாக நிரப்புவதே அரசின் கொள்கையாகும். அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணியாளர்களைத் தெரிவு செய்யும் நடைமுறையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பணியிடங்களுக்கான தெரிவு முகமைகளின் மூலம் நடத்தப்படும் சில போட்டித் தேர்வுகளின் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருவதும், அப்பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதத்திற்கு ஒரு காரணமாகும். அவ்வாறு வழக்குகள் தொடரப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ள உரிய விதிகளும் இந்த அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய விதித் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கான தொடர் நடவடிக்கையை இந்த அரசு கட்டாயம் மேற்கொள்ளும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

TNPSC has issued an important announcement regarding the news that appeared in social media and some newspapers that only 1,754 posts will be filled throughout the year.