Mother tongue learning: தாய் மொழியில் கற்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்: தர்மேந்திர பிரதான்

கோவை: Dharmendra Pradhan said that learning in the mother tongue is the main objective of the National Education Policy. அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், தமிழில் வணக்கத்தை கூறி தனது உரையை தொடங்கினார். இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம் வாரணாசியில் கொண்டாடப்பட்டது. பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்களை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

‘’மற்ற உலக நாடுகளுக்கும் வழிகாட்டும் விதமாக ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. நமது கலாச்சாரம் நமக்காகவும் நமது குடும்பத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் மட்டுமில்லாமல் ‘வசுதைவ குடும்பகம்’ என்கிற அடிப்படையில் உலகத்திற்கு பயனளிக்கக்கூடியது என்று அவர் கூறினார்.

இங்கு பட்டம் பெற்ற மாணவிகள் காலனியாதிக்க கலாச்சாரங்களை கைவிட்டு நமது பாரம்பரிய கலாச்சாரங்களை தொடர வேண்டும்’ என மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் உட்பட 2704 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவிநாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ் பி தியாகராஜன், அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர், பதிவாளர், கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ‘நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அதற்கான நிதி உதவிகளையும் பிரதமர் அறிவிக்க உள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மொழிக் கொள்கை, டிஜிட்டல் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு அம்சங்களும் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் நான்கு வருடம் அல்லது மூன்று வருட காலத்திற்கான படிப்புகளை அவர்களே தேர்வு செய்யலாம். இது முழுக்க முழுக்க அவர்களது தேர்வைப் பொருத்தது என்று அமைச்சர் கூறினார். இதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சமாக அடிப்படை கல்வியை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய கருத்து உள்ளது. அதன் அடிப்படையில் முதல்முறையாக 2023-24 கல்வி ஆண்டுக்கான என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் தமிழ், தெலுங்கு, வங்காளம் உட்பட பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட உள்ளதாக அவர் கூறினார். இதுவரை இந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

‘’நாம் பல்வேறு தொழில்நுட்பங்களுக்காக வெளிநாடுகளையே நம்பியிருந்தோம். ஆனால், இன்று இந்தியா சுயமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக மொபைல் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு என ‘பாரத் ஆப்ரேட்டிங் சிஸ்டம்’ தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு துறைகளிலும் தொழில்நுட்ப ரீதியாக நமது நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது ‘’ என்று அவர் கூறினார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து வந்த மக்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் புதிய அனுபவங்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சி அடுத்த அடுத்த வருடங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.