IIT Madras organizes Sports Carnival: ஐஐடி மெட்ராஸ்-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகள் அறிமுகம்

சென்னை: IIT Madras organizes Sports Carnival for Persons with Disabilities. ஐஐடி மெட்ராஸ்-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையம் (TTK Center for Rehabilitation Research and Device Development – R2D2), புதிய ஐசிஎம்.ஆர்- உதவி சுகாதாரத் தொழில்நுட்ப முன்முயற்சிக்கான தேசிய மையத்தின் (ICMR- National Centre for Assistive Health Technology – NCAHT) மூலம் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுத் திருவிழாவை இக்கல்வி நிறுவனத்தில் நடத்தியுள்ளது.

‘ஸ்போர்ட்ஸ் ஃபார் ஆல்’ என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையில் முதன்முறையாக விளையாட முயற்சி செய்துள்ளனர். ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (IDPD) அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாற்றத் தீர்வுகள்: அணுகக் கூடிய மற்றும் சமத்துவமான உலகத்திற்கு ஆதரவு அளிப்பதில் புத்தாக்கத்தின் பங்கு’ என்பதுதான் உலக சுகாதார அமைப்பின் (WHO) கருப்பொருளாகும்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுடெல்லி உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து 214 மாற்றுத் திறனாளிகள, 255 பராமரிப்பாளர்கள்/ பொதுமக்கள், 111 தன்னார்வலர்கள்/ மாணவர்கள் பதிவு செய்து இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிபுணர்கள், புதிய முறைகளை அறிமுகம் செய்வோர், விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக டிடிகே ஆர்2டி2 மையத்தைப் பாராட்டிப் பேசிய, தலைமை விருந்தினரான ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “2030-ல் நிலையான வளர்ச்சி இலக்குகளில் உள்ளடக்கிய தன்மை என்பது அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும். புதுமையான தீர்வுகளுக்கு அணுகும் நிலையில் இல்லாததால் உலகளவில் மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கி வைக்கப்பட்டோ பின்தங்கியோ உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்கும் விதமாக, உள்ளடக்கிய இயக்குதசை செயல்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை வாய்ப்புகளை வழங்குகின்றன” எனக் குறிப்பிட்டார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (NIEPMD), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா, அமெரிக்க வெளியுறவுத் துறை- டென்னிசி பல்கலைக் கழகத்தின் முன்முயற்சியான குளோபல் ஸ்போர்ட்ஸ் மென்டரிங் புரோகிராம், டெக்கத்லான் போன்றவை இந்நிகழ்ச்சிக்கான ஒத்துழைப்பை வழங்கி உள்ளன.

இவ்வாறான நிகழ்வுகளின் அவசியம் குறித்து விளக்கிய ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை மற்றும் ஆர்2டி2, என்சிஏஎச்டி தலைவரான பேராசிரியை சுஜாதா சீனிவாசன் கூறுகையில், “உலகம் அணுகக் கூடியதாகவும் சமத்துவமாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனில், அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவை, அனைத்துத் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவது அவசியமாகும். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு குறித்த உலக சுகாதார அமைப்பின் துணைக் கருப்பொருள்களில் ஒன்றின் அடிப்படையிலேயே, ஐஐடி மெட்ராஸ்-ல் ஆர்2டி2- என்சிஏஎச்டி நிகழ்ச்சியை ‘ஸ்போர்ட்ஸ் ஃபார் ஆல்’ என்ற பரந்த கருப்பொருளில் நடத்தத் திட்டமிடப்பட்டது” என்றார்.

நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்:
மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுகளை அறிமுகப்படுத்துதல்
விளையாட்டுத் துறையில் புதுமையான உதவி சாதனங்களை அறிமுகப்படுத்துதல்
மாற்றுத் திறனாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வைப் பராமரிப்பதில் விளையாட்டுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புதல்
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகள், நிறுவனங்கள்/ அமைப்புகள், இதரத் துறைகள் ஆகியவற்றுக்கு பொதுத் தளத்தை உருவாக்குதல்
உள்ளடக்கிய விளையாட்டுகள் மூலம் சமூகப் பங்கேற்பை எட்டுதல்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜி. பூர்ணச்சந்திரன் (வயது 32) தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது, “சக்கர நாற்காலியில் கூடைப் பந்து விளையாட்டு வீரரான நான், இதர விளையாட்டுகளையும் அறிந்து கொள்ளும் அற்புதமான வாய்ப்பாகக் கருதுகிறேன். குறிப்பாக, சக்கர நாற்காலிப் பந்தயம், துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுகளுக்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால் இதுபோன்று முயற்சி செய்யும் வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காது” எனத் தெரிவித்தார்.

பெங்களூரைச் சேர்ந்த நேத்ராவதி (வயது 30) கூறும்போது, “நான் மாற்றுத் திறனாளியான பின்னர் விளையாட்டு ஒன்றில் பங்கேற்பது இதுவே முதன்முறை. சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென எந்த விளையாட்டு வாய்ப்புகளும் கிடையாது. இங்கு வந்திருப்பதில் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஐஐடி மெட்ராஸ்-க்கு மிக்க நன்றி” என்றார்.

கொரட்டூரைச் சேர்ந்த கணேஷ் முருகன் (வயது 36) கூறுகையில், “இதுபோன்ற நிகழ்வுகளை நிறைய நடத்த வேண்டும். ஒற்றுமை மற்றும் பிணைப்பு உணர்வை ஏற்படுத்துவதுடன், உள்ளடக்கிய உரையாடல்களையும் தொடங்க முடிகிறது” என்றார்.

மாற்றுத் திறனாளிகள், பராமரிப்பாளர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வைப் பார்வையிட்டு வெவ்வேறு விதமான விளையாட்டுகளில் பங்கேற்கும் திருவிழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சக்கர நாற்காலி கூடைப்பந்து, சக்கர நாற்காலி கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், சக்கர நாற்காலி பந்தயம், சக்கர நாற்காலி டென்னிஸ், டேபிள் டென்னிஸ், சக்கர நாற்காலி, பேட்மிண்டன், பலகை விளையாட்டுகள், எறியும் விளையாட்டுகள் (ஈட்டி எறிதல், வட்டு எறிதல், உருளைத் தடி எறிதல்), டார்ட், போச்சியா, பவர்லிப்ட் போன்ற 12 வகையான விளையாட்டுகள் தகவமைப்பு உபகரணங்களுடன் இடம்பெற்றுள்ளன.