IIT Madras Calls for Applications for Executive MBA: சென்னை ஐஐடி.,யில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி கடைசி

சென்னை: IIT Madras Calls for Applications for Executive MBA Degree Program. சென்னை ஐஐடி.,யில் நிர்வாக எம்பிஏ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), பணிபுரியும் வல்லுநர்களுக்கான பணியிடைக்காலப் படிப்பாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ள நிர்வாக எம்.பி.ஏ. (Executive MBA- EMBA) பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு(NIRF) பட்டியலில், முதல் 10 வணிகப் பள்ளிகளில் இடம்பெற்றுள்ள ஐஐடி மெட்ராஸ்-ன் மேலாண்மைக் கல்வித் துறை வழங்கும் இந்த இரண்டாண்டு பாடத் திட்டம் கடுமையானது மட்டுமின்றி நடைமுறை சார்ந்ததாகும்.

டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய நிலைப்பாடு, தொழில்துறை 4.0 தொழில்நுட்பம் போன்ற களங்களில் தொழில்துறைக்குத் தேவையான அதிநவீன அறிவை வழங்குவதுதான் இஎம்பிஏ பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

எந்தவொரு சமகால வணிகம், பொருளாதாரத் தளம், உலகளாவிய வணிக மேலாண்மை போன்றவற்றுக்கும் அவசியமான சமூக ஊடகங்கள் மற்றும் இணைய சந்தைப்படுத்தலை இந்தப் பாடத்திட்டம் தெளிவாக விளக்குகிறது.இணையப் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள், வணிக மாதிரிகள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட இதர முக்கியமான பாடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. நவீன உற்பத்தி நடைமுறைகள், 3டி பிரிண்டிங் உள்பட தொழில்நுட்ப அம்சங்களையும் மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இந்த பாடத்திட்டத்தில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அக்டோபர்10ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் https://doms.iitm.ac.in/emba/என்ற இணைய முகவரியில் விண்ணபிக்கலாம்.

இஎம்பிஏ திட்டம் பற்றிக் குறிப்பிட்ட ஐஐடி மெட்ராஸ், மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் தேன்மொழி, “இத்துறையால் நடத்தப்படும் இஎம்பிஏ பாடத் திட்டம் தொடர்ந்து தொழில்துறையின் பேராதரவைப் பெற்று வருகிறது. மாணவர்கள் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தும், சராசரியாக 11 வருட அனுபவத்துடனும் படிக்க வருகின்றனர். இந்தத் துறையின் வலுவான ஆசிரிய வளங்கள், அதிநவீன ஆராய்ச்சி, அனுபவக் கற்றல் போன்றவற்றை இத்திட்டம் வாயிலாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.

பணிபுரியும் வல்லுநர்களை பணியிடைக் காலத்தில் ஈடுபடுத்தும் பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, ஆழ்ந்த செயல்பாடு மற்றும் பரந்த தொழில்துறை கள அறிவு, வெவ்வேறு சூழலில் எடுக்கப்படும் வணிக முடிவுகளின் ஒருங்கிணைந்த தொலைநோக்கு, உலகளாவிய வணிக அமைப்பில் பங்களிப்பை வழங்க தலைமைப் பண்புகள், வார இறுதி நாட்களில் கல்விபயிலும் வகையில் (நேரடியாகவும் காணொலியிலும்) இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டு ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டு, ஒருவாரம் விட்டு மறுவாரம் என வாரஇறுதி நாட்களில் நடைபெறும்.

மாணவர் சேர்க்கைக்கான தகுதி, முதல்வகுப்பு மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தொழில்துறை அனுபவம். ஐஐடி மெட்ராஸ்-ன் மேலாண்மைக் கல்வித் துறையால் நுழைவுத் தேர்வும், தனிப்பட்ட நேர்காணலும் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

செயல்பாட்டு அடித்தளம் – வணிகத்தின் முக்கிய செயல்பாடுகள், துறையின் பங்களிப்பு ஆகியவை குறித்த தத்துவ, கருத்தியல், நுண்ணறிவுப் புரிதலை வழங்குகிறது.

ஒருங்கிணைந்த தொலைநோக்கு- குறுக்கு செயல்பாட்டு சவால்கள், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றில் தொலைநோக்கு நிலைப்பாடுகளை மேற்கொள்ள உதவும்

உலகளாவிய தலைமைத்துவம்- உள்ளூர் முதல் உலகளாவிய வணிகச் சூழலில் வளர்ச்சி, லாபம், நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான வழிகளை ஆராயும்.

உச்சக்கட்ட கல்வியுடன் அறிவுசார் அனுபவத்தை வழங்கும் பன்முகப் பணியாக, ஆழ்ந்த நுண்ணறிவை மேலாண்மைக் கருத்துகளாக மேம்படுத்தும் வகையில் மூன்று கேப்ஸ்டோன் (capstone) திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.