3000 student gathered in Villupuram Govt College: விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நேரத்தில் குவிந்த 3000 பேர்

விழுப்புரம்: 3000 people gathered at the same time for admission in Villupuram Government College. விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நேரத்தில் 3000 பேர் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் நகரில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி (Arignar Anna Govt. Arts College, Villupuram) அமைந்துள்ளது. இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.

இங்கு இளங்கலை , முதுகலை, இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் மற்றும் ஆய்வியல் நிறைஞர் உள்ளிட்ட பாடங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இளம்அறிவியல் மற்றும் பி.ஏ., பி.காம். உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 2 ஆயிரம் இடங்களுக்கு சுமார் 17 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளன.

மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே எஞ்சியுள்ள இடங்களுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் தங்களின் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டுமென கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று பி.எஸ்சி., இளம்அறிவியல் பாடப்பிரிவுக்காக பதிவு செய்வதற்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள், அரசு கல்லூரி முன்பு குவிந்தனர்.

எஞ்சியுள்ள சுமார் 300 இடங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் குவிந்ததால் கல்லூரி வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அதோடு அங்குள்ள கல்லூரி சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு விழுப்புரம் நகர போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், மாணவ- மாணவிகள் கல்லூரியின் உள்ளே அனுமதிக்கப்பட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெறப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம். உள்ளிட்ட பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு பதிவு நடைபெறுகிறது.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கட்-ஆப் மதிப்பெண் தகுதியின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.