UAPA Act on 5 arrested persons: கோவை கார் வெடிவிபத்து: கைதான 5 பேர் மீது உபா சட்டம்

கோவை: 5 people arrested in car blast accident in Coimbatore under UPA Act.கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது.

கோவை மாநகரின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் தெருவில் கடந்த 23ம் தேதி அதிகாலை கார் வெடித்து சிதறியது. அந்த காரில் பயணம் செய்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பால்ரஸ் குண்டுகள் மற்றும் ஆணிகள் கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில் ஜமேஷா முபின் வீட்டில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்தினம் அவரது வீட்டிற்கு 5 பேர் வந்து சென்றுள்ளதாக சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 24.10.2022 23.10.2022-ஆம் தேதி அதிகாலை 0400 மணியளவில், கோவை மாநகரம், உக்கடம், கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே, மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த வழக்கில் ஜமேசா முபின் (29), த/பெ. அப்துல் காதர், எண்.19/64, HMPR தெரு, கோட்டைமேடு, கோவை என்பவர் இறந்துபோயுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக கோவை மாநகரம் பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் 1. முகமது தல்கா (25), உக்கடம் 2. முகமது அசாருதீன் (23), உக்கடம் 3. முகமது ரியாஸ் (27), G.M.நகர் 4. ஃபிரோஸ் இஸ்மாயில் (27), G.M.நகர் 5. முகமது நவாஸ் இஸ்மாயில் (26), G.M.நகர் ஆகிய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காரிலிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் சுமார் 10 பேரிடம் கை மாறியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜமேஷா முபின் வீட்டிலிருந்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கார் சிலிண்டர் வெடித்த உடனடியாக துப்பு துலக்கினோம். சிலிண்டர் விபத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.