Petrol bombing continues in Tamil Nadu: தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: Petrol bombing continues in Tamil Nadu. தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புநிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. அதன்படி, தமிழகத்தின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீதாராமன் வீட்டில் நேற்று அதிகாலை பெட்ரொல் குண்டு வீசப்பட்டிருந்தது. குடும்பத்தினரும் சேர்ந்து, எரிந்து கொண்டிருந்த தீயை, தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். தகவலறிந்த விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சீதாராமன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி, வாகனத்தில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

அதேபோல், ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த பா.ஜ., முன்னாள் நகர துணை தலைவர் சிவசேகருக்கு சொந்தமான மூன்று கார்களை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து திண்டுக்கல், குடை பாறைப்பட்டியைச் சேர்ந்த பா.ஜ., மேற்கு நகர தலைவர் பால்ராஜிக்கு சொந்தமான குடோனில், நேற்று அதிகாலை கார், 5 பைக்குகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

சேலம் அம்மாபேட்டையில் ஆர் .எஸ். எஸ். இயக்கத்தில் உள்ள ராஜன் வீட்டில் நேற்று இரவு ராஜன் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கருமண்கடல் பகுதியில் பாஜக பிரமுகர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் பிஜேபி தொண்டர்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தமிழ்நாட்டில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன; தமிழ்நாட்டை வெடிகுண்டு கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனைத்து சம்பவங்களிலும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி கேமரா பதிவுகளாக பார்த்து வருகிறோம். சில வழக்குகளில் குற்றவாளிகளின் அடையாளம் தெரிகிறது; விரைவில் கைது செய்யப்படுவர் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.