Cow thieves arrested near Erode: ஈரோடு அருகே முதியவரை கை, கால்களை கட்டி ஏரியில் வீசிய முகமூடி திருடர்கள் கைது

ஈரோடு: Cow thieves arrested near Erode: ஈரோடு அருகே முதியவரை கை, கால்களை கட்டி ஏரியில் வீசிவிட்டு மாடுகளை திருட முயன்ற முகமூடி திருடர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பர்கூர் ரோட்டில் சீதாலட்சுமி தியேட்டர் எதிரில் வசித்து வருபவர் அத்தப்பகவுண்டர் (வயது 68). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். அங்கேயே 20 மாடுகள், 25க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இவரது மனைவி காலையிலிருந்து மாலை வரை தோட்டத்தில் வேலை செய்துவிட்டு பெரியார் நகரில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவார். அத்தப்பகவுண்டர் மட்டும் அங்கேயே தங்கி விடுவார்.

இந்நிலையில், விவசாய தோட்டத்தில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு மாடுகளைத் திருடுவதற்காக கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அத்தப்பகவுண்டரின் கை கால்களை கட்டினர். பின்னர் அவரை அந்தியூரில் ஏரியில் வீசியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட முதியவர், கைகளை கட்டியிருந்த கயிற்றை பற்களால் கடித்து அவிழ்த்து சத்தமிட்டபடி திருடர்களை நோக்கி ஓடி வந்தார். அப்போது அங்கிருந்த திருடர்கள் கையில் வைத்திருந்த அறிவாளால் தலை மற்றும் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அங்கிருந்த முகமூடி திருடர்கள் மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த பிக்கப் வேனை விட்டு விட்டு தப்பி ஓடினர். இது குறித்து தகவலின்பேரில்,, பிக்கப் வேனை பறிமுதல் செய்து அந்தியூர் போலீசார் தப்பி ஓடிய முகமூடி திருடர்களைத் தேடி வந்தனர். இதில், திருடர்களின் தாக்குதலால் காயம் அடைந்த முதியவர் அத்தப்பகவுண்டர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை ரோந்து பணியில் இருந்த அந்தியூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிடித்து விசாரணை செய்ததில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் (20,) இக்பால் (34), மகேந்திரன் (26) சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அடைக்கலம் (32) என்பதும் இவர்கள் நான்கு பேரும் அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையத்தில் கொங்கு புரோட்டா என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்ததும், அத்தப்பகவுண்டர் வீட்டில் மாடு திருட முயன்றும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.