Auto driver commits suicide: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை

சென்னை: Auto driver commits suicide after losing money in online rummy. சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரின், மணலி எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன்(வயது26). இவருக்கு துர்கா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆட்டோ டிரைவர் பார்த்திபன் கடந்த சில காலமாகவே ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விளையாட்டில் மூழ்கியிருந்த அவர் ஏராளமான பணத்தை கடன் வாங்கியதாகவும், மேலும் அவரது மனைவி சுயஉதவிக்குழுவில் இருந்து வந்ததும், அந்தக்குழுவில் ரூ.50 ஆயிரம் கடனை பெற்று அதனையும் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடன் கொடுத்தவர்கள் அவருக்கு தொல்லை கொடுத்துவந்தது அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பார்த்திபன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது மனைவி துர்காவை, அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் அனுப்பி வைத்துள்ளார்.

இரவு வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி போலீசார் பார்த்திபனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்த பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மணலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், தொடர்ந்து இவ்விளையாட்டுக்களில் பணமிழக்கும் மக்கள், உயிரை மாய்த்துக் கொள்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.