Attack on Headmaster: திருவண்ணாமலை அருகே தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்; ஆசிரியர் கைது

திருவண்ணாமலை: The police arrested a teacher who assaulted an assistant headmaster with a chair near kalasapakkam.கலசபாக்கம் அருகே உதவி தலைமை ஆசிரியரை நாற்காலியால் தாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள ஆதமங்கலம் புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் கலசபாக்கம் அருகே நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (38) என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் விடுமுறையில் சென்றிருந்தார். இதனால் அந்த பொறுப்பை உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் கவனித்து வந்தார். 8-ந் தேதி ஆறுமுகம் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் வகுப்பு நேரத்தில் செல்போன் பயன்படுத்தி கொண்டு இருந்ததை பார்த்ததர். ஆனால் இது பற்றி அவரிடம் எதுவும் பேசாமல் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் நடைபெற்ற இறை வணக்க கூட்டத்தின் போது மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் யாரும் வகுப்பு நேரங்களில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என ஆறுமுகம் அறிவித்துள்ளார். இதயைடுத்து விடுமுறை முடித்து நேற்று பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சீனிவாசனிடம் பச்சையப்பன் தன்னை மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்படுத்துவதை குறிப்பிட்டு பேசி உதவி தலைமை ஆசிரியர் அசிங்கப்படுத்தி உள்ளதாக புகார் தெரிவித்தார்.

அப்போது அங்கிருந்த ஆறுமுகத்திற்கும், பச்சையப்பனுக்கும் தலைமை ஆசிரியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த நாற்காலியை எடுத்து ஆறுமுகத்தை தாக்கியதாக தெரிகிறது.

இதில் ஆறுமுகத்துக்கு காயம் ஏற்பட்டு கலசபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒழுக்கத்தை போதிக்க கூடிய ஆசிரியர்களே இவ்வாறு நடந்து கொண்டால் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்று பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த நிகழ்வை தீவிரமாக காவல்துறையினர் விசாரித்து ஆசிரியர்கள் இருவர் மீதும் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.