1,635 corruption cases: தமிழகத்தில் 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: High Court has ordered the speedy completion of 1,635 corruption cases in Tamil Nadu. தமிழகத்தில் 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 1983 முதல் 2021ம் ஆண்டு வரையில் 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றி அண்ணாதுரை என்பவர் ஓய்வுபெற்றார். இந்த நிலையில் இதுவரை அவருக்கு ஓய்வு பலன்கள் வழங்கவில்லை. எனவே இதனை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில், 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள்காட்டி, ஊழல் வழக்குகள் நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இது ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும் எனத் தெரிவித்த நீதிபதி, தேவையில்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகால பலன்களை பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்றவழக்கு முடிவுக்கு வந்த பின் மீத பலன்களை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.