Singer Vani Jayaram cremated: காவல்துறை மரியாதையுடன் பாடகி வாணி ஜெயராம் உடல் தகனம்

சென்னை: Singer Vani Jayaram cremated with police honors. பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பாடகி வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். இவர், தமிழில், மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

சுமார் 1000 படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள மிகச்சிறந்த பாடகியான வாணி ஜெயராம் சிறந்த பின்னணி பாடகிக்காக 3 முறை தேசிய விருதை பெற்றுள்ளார். தமிழகத்தில் மட்டுமன்றி, ஆந்திரா, குஜராத், ஒடிசா மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றவர். சமீபத்தில் கூட மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. இந்த நிலையில் 78 – வயதாகும் வாணி ஜெயராம் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்தார்.

2018-ஆம் ஆண்டு இவரது கணவர் ஜெயராம் மறைந்தை அடுத்து, குழந்தைகளும் இல்லாததால் வாணி ஜெயராம் தனியாக வசித்து வந்தார். இவரது இந்த திடீர் மரணம் இயற்கைக்கு மாறாது என கூறி காவல்துறை தரப்பில் வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தகவலும் வெளியாகி உள்ளது. அதில், கீழே விழுந்ததில் தலையில் அடிபட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினர், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என ஏராளமானோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். வாணி ஜெயராமின் மறைவிற்கு பிரதமர் மோடி, கலையுலகின் மிகப் பெரிய இழப்பு என இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாணி ஜெயராமின் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு தமிழக அரசு சார்பில் 10 போலீஸார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர் . தொடர்ந்து வாணி ஜெயராம் அவர்களுக்கு சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.