Actor Vimal: நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

Actor Vimal: நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியதாவது,

பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.

படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும் எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.

இதையும் படிங்க: coronavirus : கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின் யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.

இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர் என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.

அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)

இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.

இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.

எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/- தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Liquor Bottle: நீலகிரியில் விற்பனையாகும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்