Edible oil: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு

edible-oil
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு

Edible oil: நாட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

உக்ரைன் போர் காரணமாக அந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் தொடங்கிய சில சமையல் பொருட்கள் வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கி உள்ளது.

உலகில் சூரிய காந்தி உற்பத்தியில் முதன்மை இடத்தில் உள்ளது உக்ரைன். போர் காரணமாக அங்கிருந்து வரும் சூரிய காந்தி குறைந்துள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சூரிய காந்தி உட்பட அனைத்து சமையல் எண்ணெய்களின் விலையும் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே உள்நாட்டில் விலையைக் குறைக்கும் நடவடிக்கையாக சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதிக்குச் சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2022-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் இந்த வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் இந்த வரி விலக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான இறக்குமதிக்குப் பொருந்தும் என்று நிதி அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எரிபொருள் தொடங்கி காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் மொத்த விற்பனை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.79 சதவீதமாக உயர்ந்தது. இப்படித் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கத்தால் ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி 4.40 சதவீதமாக நிர்ணயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்