Turkey earthquake: துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்

துருக்கி: Powerful 7.8 magnitude earthquake hits in southern Turkey. துருக்கியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இது ஒரு நிமிடம் நீடித்ததாகவும், வீடுகளில் உள்ள ஜன்னல்கள் உடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், 15 நிமிடங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டு, கட்டிடங்கள் குலுங்க தொடங்கியவுடன் மக்கள் பீதியடைந்து வீடுகளில் இருந்து வெளியே வந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 95க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக துருக்கி – சிரியாவின் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சிரியா நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது. அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.