ஐந்து மாவட்டங்களில், இன்றும் மழை பெய்யும்

சென்னை-மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஐந்து மாவட்டங்களில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி கோவை மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 16; நடுவட்டத்தில் 14; மேல் பவானியில் 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கோவை, தேனி, கன்னியாகுமரி, பெரம்பலுார், சேலம், திருநெல்வேலி, சென்னை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.நீலகிரி, கோவையில் இன்றும் கன மழை தொடரும். மீட்பு பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் 130 பேர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, வடகடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது; மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும்