Encounter : என்கவுன்டரில் 2 பேர் உயிரிழப்பு

encounter
என்கவுன்டரில் 2 பேர் உயிரிழப்பு

Encounter: செங்கல்பட்டு கே.கே. தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மேட்டுத் தெருவைச் சேர்ந்த மகேஷ் அடுத்தடுத்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது ரவுடி கும்பல் கார்த்திக்கை சுற்றி வளைத்து வெடிகுண்டு வீசி கொன்றது.

பின்னர் அந்த கும்பல் மேட்டுத் தெருவில் உள்ள மகேஷ் வீட்டுக்கு சென்று வீடு புகுந்த அவரை சரமாரியாக வெட்டி கொன்றது. செங்கல்பட்டில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரும் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், மொய்தீன் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை பிடிப்பதற்கு செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வடிவேலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு, சங்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் இருவரும் உத்திரமேரூர் அருகே உள்ள திருப்பாபுலியூர் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு விரைந்து சென்றனர்.

இரட்டை கொலையில் தொடர்புடைய மொய்தீன், தினேஷ் இருவரும் மறைவாக ஒரு இடத்தில் பதுங்கி இருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி முனையில் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடிகள் இருவரும் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டுகளை எடுத்து வீசினார்கள்.

இதை போலீசார் எதிர்பார்க்கவில்லை. போலீசாரை நிலை குலைய செய்து விட்டு, தப்பி ஓடி விட 2 ரவுடிகளும் முயற்சி செய்தனர். என்றாலும் போலீசார் துணிச்சலுடன் 2 ரவுடிகளையும் பிடிக்க நெருங்கி சென்றனர். அப்போதும் 2 ரவுடிகளும் திடீரென ஆவேசத்துடன் போலீசாரை அரிவாளால் தாக்கினார்கள்.

ரவுடிகளின் எதிர்பாராத திடீர் தாக்குதலை சமாளித்து முன்னேறிய தனிப்படை போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரவுடிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதில் மொய்தீன், தினேஷ் இருவரும் போலீஸ் என்கவுண்டரில் பலியானார்கள். இதுபற்றி உடனடியாக தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் என்கவுண்டர் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

போலீசாரை கொலை செய்யும் நோக்கத்தில் ரவுடிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் தற்காப்புக்காக அவர்களை சுட்டுக்கொல்ல நேரிட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் நேற்று நடந்த இரட்டை கொலை சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் அதில் தொடர்புடைய 2 ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

இதனால் இரட்டை கொலை நடைபெற்ற செங்கல்பட்டு, என்கவுண்டர் நடைபெற்ற உத்திரமேரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் 2 ரவுடிகள் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகி இருப்பதால் மற்ற ரவுடிகளும் கலக்கத்தில் உறைந்து போய் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம், படப்பை பகுதிகளில் தொழிற்சாலைகளில் கட்டப்பஞ்சாயத்தை ஒழித்துக்கட்ட என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட் அதிகாரியான வெள்ளத்துரை ரவுடிகளை ஒழிப்பதற்கு நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் செங்கல்பட்டில் வெடிகுண்டு வீசி 2 பேரை கொலை செய்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட 2 ரவுடிகளை போலீசார் அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதற்கிடையே செங்கல்பட்டு இரட்டை கொலைக்கு காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கார்த்திக், மகேஷ் இருவரும் சேர்ந்து தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட தினேசை வெட்டி உள்ளனர். இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என கார்த்திக், மகேஷ் இருவரும் தினேசை மிரட்டி உள்ளனர். இதன் காரணமாகவே தினேஷ் தனது கூட்டாளியான மொய்தீனுடன் சேர்ந்து இருவரையும் கொன்றது தெரிய வந்தது.

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட கார்த்திக்குக்கு தீபிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகேசின் மனைவி பெயர் தேவி, அவருக்கு ஆண் குழந்தை ஒன்றும், ஒரு பெண் குழந்தைஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை கொலை மற்றும் என்கவுண்டர் சம்பவங்களை தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக செங்கல்பட்டு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடலும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக ரவுடிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர். இதனால் அங்கும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tirupati Temple: திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்