உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் – டிஎன்பிஎஸ்சி

உதவி கணினி அமைப்பு பொறியாளர், உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் பணிகளுக்குச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

”இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் அடங்கிய உதவி கணினி அமைப்பு பொறியாளர் மற்றும் உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்களின் மூலச் சான்றிதழ்களை அக்.27-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவ்விண்ணப்பதாரர்களுக்குக் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று கருதி, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த கூறிப்பாணை மற்றும் இ-சேவை மையங்களின் பட்டியல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது”.இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.