திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான இணையதளம் முடங்கியது

ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை திருமலை தேவஸ்தானம் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவுசெய்ய ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் முயன்றதால் தேவஸ்தான இணையதளம் முடங்கியது.

வரும் டிசம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை திருமலை தேவஸ்தானம் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது. இந்த தரிசன டிக்கெட்டுகளை இந்தியாவிலிருந்து மட்டுமே அல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்ய முயன்றனர்.

அதிகபட்சமாக ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் 20 ஆயிரம் முன்பதிவுகளை மட்டுமே ஒரே நேரத்தில் தாங்கும் திறன் கொண்ட தேவஸ்தான சர்வர் முடங்கியது. தகவலறிந்த, தேவஸ்தான தகவல் தொழில்நுட்ப துறையினர் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.