ஆந்திராவில் நவ.,2 முதல் பள்ளிகள் திறப்பு

ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகளை அரைநாள் மட்டும் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசனை மேற்கொள்கின்றன. இதற்கிடையே நேற்று (அக்.,20) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‛கொரோனா தொற்று முற்றிலுமாக இன்னும் நீங்கவில்லை, பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் நவ.,2ம் தேதி முதல் அரைநாள் மட்டும் பள்ளிகள் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 1, 3, 5, 7, 9, 11ம் வகுப்புகளுக்கு ஒரு நாளும், 2, 4, 6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு ஒருநாளும் என மாற்றி மாற்றி அரைநாள் மட்டும் (காலை வேலையில்) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை நவ., மாதத்திற்கு மட்டுமே எனவும், சூழலை பொறுத்து டிச., மாதத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.