எஸ்பிஐ உடன் கைக்கோர்த்த பேடிஎம்! புதிய கிரெடிட் கார்டுகள் அறிமுகம்

எஸ்பிஐ கார்ட்ஸ் (SBI Cards), பேடிஎம் சேவை (Paytm Services) இணைந்து இன்று (நவ.04) புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளன.

எஸ்பிஐ கார்ட்ஸும் பேடிஎம் சேவையும் இணைந்து புதிய கிரெடிட் கார்டுகளை இன்று அறிமுகம் செய்துள்ளன. பேடிஎம் எஸ்பிஐ கார்ட் (Paytm SBI Card), பேடிஎம் எஸ்பிஐ கார்ட் செலக்ட் ( Paytm SBI Card Select) என இரண்டு விதமான கிரெட்டிக் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, இந்தக் கார்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இதன் அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை கூகுள் பே போன்ற இதர பணப்பரிவர்த்தனை செயலிகளிலும், கடைகளில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்பிஐ கார்ட் தலைமைச் செயல் அலுவலர் அஸ்வினி குமார் திவாரி கூறுகையில், ”இந்தியாவில் கிரெடிட் கார்ட் துறை பெருமளவில் பல மக்களிடம் சென்றடையாத வகையில்தான் உள்ளது. கரோனா தொற்று காரணமாக, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைதான் இதில் முக்கியப் பங்கு வகிக்கறது.

இதனால், கிரெடிட் கார்ட் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, பேடிஎம் உடன் கூட்டணி வைத்து புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளோம். மேலும் மக்கள் பாதுகாப்பான முறையிலும், கார்ட் இல்லாமல் ஒரே டேப் (Tab and Pay) மூலம் எளிய முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையிலும் இந்தக் கார்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்