ACB Court: சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம்

rs-2-crore-bribe-case-sasikala-appear-bengaluru-acb-court
சசிகலா அ.தி.மு.க. ஆட்சி

ACB Court: ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவரது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ரூ.10 கோடியை கட்ட தவறினாமல் மேலும் ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

அங்கு சசிகலாவுக்கு பெண்கள் சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டது. அவருக்கு கைதி எண் கொடுக்கப்பட்டு கைதிகளுக்கான ஆடைகளும் வழங்கப்பட்டன. ஆனால் சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

சசிகலா சிறையில் இருந்து அடிக்கடி சாதாரண உடையில் வெளியில் சென்று வந்ததாகவும் தகவல் பரவியது. மேலும் அவர் சிறையில் கைதிகளுக்கான ஆடை அணியாமல் வழக்கமான சேலையை அணிந்து சொகுசாக வாழ்ந்தததாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஜெயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது சசிகலா சாதாரண உடையில் ஷாப்பிங் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கண்டுபிடித்தார்.

ACB Court: சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம்

இதற்கிடையே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்து ஜெயிலில் இருந்து விடுதலையானார்கள்.

இந்த நிலையில் தண்டனை காலத்தில் சிறையில் இருந்த போது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகியோர் மீது புகார் எழுந்தது.

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கடந்த 2017-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் சசிகலா சாதாரண உடையில் ஷாப்பிங் சென்று வந்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டார்.

இந்த புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் அவர்கள் காலதாமதம் செய்ததால் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகா ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “சிறை அதிகாரிகளுக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் லஞ்சம் கொடுத்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த மனு மீது தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு தொடர் விசாரணை நடத்தியது. பின்னர் விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல் இந்த புகார் தொடர்பாக பெங்களூர் 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதுடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளிகளாக சிறைத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமார், சோமசேகர், 2-வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3-வது குற்றவாளியாக சுரேஷ், 4-வது குற்றவாளியாக கஜராஜ் மாகனூர், 5-வது மற்றும் 6-வது குற்றவாளிகளாக தண்டனை கைதிகளாக இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 109, 465, 467, 471, 120பி மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 13(1)சி, 13(2) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூர் 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சிறை அதிகாரிகள் உள்பட 7 பேரும் அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பும்படி நீதிபதி லட்சுமி நாராயண் பட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11-ந்தேதி (இன்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக பெங்களூர் 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சசிகலா இன்று அதிகாலை 5.30 மணி சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.

வழக்கு விசாரணையின் போது சசிகலா கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் இளவரசியும் ஆஜரானார். மேலும் சிறைத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமார், சோமசேகர், அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகியோரும் ஆஜரானார்கள்.

டாக்டர் அனிதா கோர்ட்டில் ஆஜராவதற்கு ஏற்கனவே தடை வாங்கி உள்ளதால் அவர் இன்று ஆஜராகவில்லை.

கோர்ட்டில் ஆஜரான சசிகலாவுக்கு இன்று குற்றப்பத்திரிகை நகல் கொடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

சிறையில் சொகுசு வசதிகள் செய்து தருவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் சசிகலா இன்று கோர்ட்டில் ஆஜராகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sasikala Granted Bail By ACB Court In ‘preferential Treatment’ Case During Her Jail Stint

இதையும் படிங்க: Russia: ஒரு போதும் போரை விரும்பியதில்லை – ரஷியா