மோடியின் 20 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை

PM modi
பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள்.

2001-ம் ஆண்டு பாஜக சார்பில் முதன்முறையாக குஜராத் முதல்வராக, மோடி தனது அரசியல் பொதுவாழ்க்கையில் தலைமை பொறுப்பை ஏற்றார். முதல்கட்டமாக குஜராத் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து மாநிலத்தை மீட்டெடுக்கும் பணிகளை துரிதப்படுத்தினார். ஆனால், ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த ஆண்டே, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால், மாநிலம் முழுவதும் மதக்கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து 2002-ம் ஆண்டில் மோடி தலைமையிலான மாநில அரசு ராஜினாமா செய்தது. இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது முறை முதல்வரானார் மோடி.

அதிலிருந்து குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல முழுமூச்சாக உழைத்தார். சோலார் மின் உற்பத்தி மூலம் குஜராத்தை மின்மிகை மாநிலமாக்கியது, குட்கா’வுக்கு தடை விதித்து போதைக்கு அடிமையான இளைஞர்களை விடுவித்தது, கார்ப்பரேட் முதலீடுகளைப் பெற்று தொழில் வளர்ச்சி கண்டது, ஊழலற்ற நிர்வாகத்தால் கல்வி, சுகாதாரம், விவசாயம், குடிநீர், சாலைப்போக்குவரத்து என அத்தனை துறைகளிலும் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தியது போன்ற பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார்.

இதன்பொருட்டு, அடுத்தடுத்து வந்த 2007, 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்று, நான்குமுறை முதல்வராக அரியனை ஏறினார். குஜராத் மாநிலத்தின் மிக நீண்டகால முதல்வர் என்கிற தனிச்சிறப்பைப் பெற்றார்.

2006-ல் `இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது. ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கியது. தொடர்ந்து, 2009-ல் ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருது, 2012-ல் ‘டைம்’ இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்று இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதி’ என்றெல்லாம் போற்றுதலும், புகழ் விருதுகளும் பெற்று இந்திய அளவில் செல்வாக்குமிக்கத் தலைவராக உருப்பெற்றார்.

இதையும் படிங்க: மோடி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா