ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை -மு.க ஸ்டாலின்

மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக, அறுவடை செய்து வைத்திருந்த நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாக போவதாகவும், நெல் முளைத்து விடுவதால் விற்கக் கூட முடியாத சூழல் நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே எடை போட்ட நெல் மூட்டைகளுக்கு, மீண்டும் எடை போட்டு ரூ.40 லஞ்சமாக அதிகாரிகள் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில் இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம், விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. ‘காவிரி காப்பாளர்’ பட்டம் மட்டும் போதுமா முதல்வரே? பயிர் தான் விவசாயிகளின் உயிர் என்பது தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை!” என குறிப்பிட்டுள்ளார்.