பிரதமரின் வாயால் அறிவிக்கப்படாத பரிசாக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு- ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு, மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த கொடூரப் பரிசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள், சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை “AIIMS” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும், தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை (LPG price hike) மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.