Russia: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு

Highly-appreciate-Indias-independent-and-balanced
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில்

Russia: உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இருந்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனை தொடர்ந்து, ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இன்று அதிகாலை 15 நாடுகள் கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால், சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது குறித்து இந்திய பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி கூறியதாவது, “மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது. மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்துத் தரப்பையும் வலியுறுத்துகிறோம்.பல்வேறு காரணங்களுக்காக இந்தியா இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்க்கிறது” என்றார்.

இறுதியில், ரஷியாவுக்கு எதிராக 11 நாடுகள் தீர்மானத்தில் வாக்களித்த போதும், ரஷியா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை முறியடித்தது.

இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று ரஷியா கேட்டு கொண்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையாக இருந்த நிலைப்பாட்டை வரவேற்கிறோம் என இந்தியாவிலுள்ள ரஷிய தூதரகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியா உடனான சுமூகமான உறவு தொடரும் என்றும் ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இருநாட்டு அதிபர்களிடமும் வன்முறையை விட்டு பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் உரையாடல் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ‘ஐ.நா.வில் மீண்டும் முன்வைக்கப்படும் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் உக்ரைனுக்கு அரசியல் ரீதியாக ஆதரவளிக்க கோரி பிரதமர் மோடிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Highly appreciate India’s independent and balanced in UN

இதையும் படிங்க: Ukraine President: இந்திய பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை