தடையை வேல் யாத்திரை – சி.டி.ரவி,அண்ணாமலை கைது

தடையை மீறி திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜ தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பாஜ சார்பில் நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வெற்றி வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரைக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாஜவின் யாத்திரைக்கு தடை விதித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பாஜ தலைவர் எல்.முருகன் வேலுடன் யாத்திரை செல்ல புறப்பட்டார். அப்போது அவருடன் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோரது தலைமையில் ஏராரளமான நிர்வாகிகள், தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திருத்தணி நோக்கி புறப்பட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.இதனால், பாஜவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 5 பேர் மட்டுமே சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பாஜ தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி, பாஜ மாநில தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா, கரு.நாகராஜன், அண்ணாமலை உள்பட 5 பேர் திருத்தணிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் சாமி தரிசனத்தை முடிந்து கொண்டு முருகன், பைபாஸ் சாலையின் ரவுண்டானா அருகில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்டோர் பேசினர்.

அப்போது மாநில தலைவர் எல்.முருகன் தலைமையிலான பாஜவினர் யாத்திரை செல்ல முற்பட்டனர். அவர்கள போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல் சி.டி.ரவி, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம், சவேரா சக்கரவர்த்தி, அண்ணாமலை உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். இரவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்