இந்தியாவில் HIV பாதிப்பு: எந்த மாநிலத்தில் அதிகம்?

இந்தியாவில் HIV பாதிப்பு
இந்தியாவில் HIV பாதிப்பு

HIV in India: 2010ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிக்கை 27% குறைந்திருந்தாலும் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தைத் தொடர்ந்து ஹெச்.ஐ.வி பாதிப்பில் பீகார் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

இந்த ஆண்டு பீகாரில் 8000 பேருக்கு ஹெ.ஐ.வி பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் உத்தரபிரதேசமும், மூன்றாம் இடத்தில் பீகாரும் இருக்கிறது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிக்கை 27% குறைந்துள்ளதாக யுனிசெஃப் டாக்டர் எஸ். சித்தார்தா சங்கர் ரெட்டி தெரிவித்திருக்கிறார். எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) எடுத்த சர்வேயில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்பேர் இளைஞர்கள்தான் என தெரியவந்துள்ளது. அதிலும் நரம்பு வழி போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களும், ஆணுடன் ஆண்(gays) பாலுறவு வைத்துக்கொள்பவர்களும்தான் ஆண்டுதோறும் அதிகளவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார் டாக்டர் ரெட்டி. பெண் பாலியல் தொழிலாளர்களிடையே (WSW) அதிகம் பதிவான எய்ட்ஸ் நிலை மாறி, தற்போது ஆணுடன் ஆண் (MSM) உடலுறவு கொள்பவர்களிடையே அதிக பாதிப்பு எண்ணிக்கை காணப்படுகிறது. அதேபோல் லாரி ஓட்டுநர்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் முன்பு எயிட்ஸ்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரவல் விகிதத்தை பொருத்தவரை, தேசிய அளவிலான மக்கள் தொகையில் 0.22%பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பீகாரின் மக்கள்தொகையில் 0.17% பேர் எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் எயிட்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற தேசிய குறிக்கோளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது என்கிறார் ரெட்டி. கொரோனா தொற்று எயிட்ஸின் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற காலக்கெடுவை 5 ஆண்டுகள் தள்ளிவைத்துவிட்டது என்கிறார் அவர்.

கொரோனா பரவல் காலத்தில் அதாவது 2020-21-க்கு இடைபட்ட காலகட்டத்தில் 5,77,103 பேருக்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டதில் 1.12%, அதாவது 6,469 பேருக்கு தொற்று உறுதியானது. அதுவே 2019-20-க்கு இடைபட்ட காலகட்டத்தில் 8,51,346-க்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1.16%, அதாவது 9,928 பேருக்கு தொற்று உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் ஆண்டுதோறும் ஹெச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை பீகாரில் குறைந்துவருவதாக கூறியுள்ளார் டாக்டர் ரெட்டி.

தொற்று குறைந்தாலும்கூட, ஹெச்.ஐ.வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் புறக்கணிக்காமல் இருக்க ஏற்பாடுகளை செய்யவும், ஹெச்.ஐ.வி சோதனை மற்றும் ஆலோசனை வசதிகள் எப்போதும் கிடைக்கவும் வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பீகாரின் யுனிசெஃப் கள அதிகாரியான நசீஃபா பிந்தே ஷாஃபிக்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருபுறமிருந்தாலும், எயிட்ஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை ஆரம்பத்திலேயே மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார் பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே. இது சவாலானதாக இருந்தாலும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்த முயற்சிகளை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களுக்கு மாநில அரசு ரூ.23 கோடியை ஒதுக்கியிருப்பதாகவும் பாண்டே தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: Vaiko: ராமேசுவரத்தில் 22-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- வைகோ