கார் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து.. புது மாப்பிள்ளை உட்பட 9 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்துள்ளது சம்பல் ஆறு. இந்த ஆற்றின் மேல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் பயணிக்கின்றன. அந்த வகையில் திருமண விருந்துக்காக புது மாப்பிளை உட்பட 9 பேர் குடும்பமாக மாதாபூரிலிருந்து உஜ்ஜைனிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். காலை 7.50 மணியளவில் அவர்கள் சென்ற கார் அந்த மேம்பாலத்திற்கு வந்தடைந்துள்ளது. 

அப்போது தான் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தை தாண்டி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனைப் பார்த்து பதறிய பொதுமக்கள் நாயபுரா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே காவல் துறையினர் மீட்புப் படையினரை அழைத்துக்கொண்டு சம்பவ இடம் விரைந்துள்ளனர். ஆனால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட அனைவருமே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். ஏழு பேரின் உடல் காரிலும் இரண்டு பேரின் உடல் ஆற்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிரேன் இயந்திரத்தின் உதவியுடனும் படகு மூலமாகவும் மீட்புப் பணி நடைபெற்றுள்ளது. கிரேன் மூலமே விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டு, அதில் இருந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஓட்டுநர் உறக்கத்தில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

இந்த விபத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்ததாகவும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.