Van Accident: திருப்பத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து -7 பேர் உயிரிழப்பு

மினிவேன் கவிழ்ந்து விபத்து
மினிவேன் கவிழ்ந்து விபத்து

Van Accident: ஜவ்வாது மலையில் வேன் கவிழ்ந்து குழிக்குள் விழுந்த விபத்தில் கோயிலுக்கு சென்ற 7 பேர் உயிரிழந்தனர்.

ஜவ்வாது மலையில் அமைந்து இருக்கும் புதூர் நாடு, புங்கப்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 கிராமங்களில் சுமார் 30,000-க்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சேம்பரை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்கி வருகிறது.

இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு கரடு முரடான மலைப் பாதையில் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு காரணமாக ஜவ்வாது மலை ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. இன்று ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டு செல்வதற்காக சரக்கு வேன் ஒன்றில் ஏராளமான பக்தர்கள் ஜவ்வாது மலையில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது மலைப்பாதையில் பாரம் தாங்க முடியாமல் வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

வேன் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி சென்று 50 அடி ஆழம் கொண்ட குழிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மேலும் இருவர் விபத்து நடந்த சில நிமிடங்களில் பலியாகினர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கரடு முரடான மலை பாதை காரணமாகவும், செல்போன் சிக்னல்கள் முறையாக கிடைக்காததாலும் மீட்புப் பணிகள் தாமதமாகவும் தொய்வுடனும் நடைபெற்றன.

இதையும் படிங்க: Lockdown: இலங்கையில் முழு ஊரடங்கை அறிவித்தது அரசு..!