தமிழகத்தில் சுட்டெரித்த கோடை வெயிலை தணித்த மழை..!

கோடை வெயிலை தணித்த மழை
கோடை வெயிலை தணித்த மழை

Summer Heat: தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீரால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, உள்ளிட்ட இடங்களில் சாலை ஓரங்களிலும் மழை நீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், ஏரிச்சாலையை சுற்றியுள்ள மழை நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான கும்பக்கரை, சோத்துப்பாறை, கல்லாறு வனப்பகுதி மற்றும் தேவதானபட்டி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த இரண்டு தினங்களாக அங்கு வெயில் வாட்டி வந்த நிலையில், சுற்றுவட்டார பகுதிகளான தட்டாங்குட்டை, குப்பாண்டபாளையம், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இதையும் படிங்க: Narendra Modi: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம்

அங்கு, காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. மேலும், அங்குள்ள மேம்பாலத்தின் அடியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.எனவே, மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரியகுளம் பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கரூரில், இரவு நேரத்தில் கோடை மழை பெய்தது. வெங்கமேடு, காந்தி கிராமம், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. கரட்டடிபாளையம், கவுந்தப்பாடி சிறுவலூர், கொளப்பலூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்