Traffic change in Coimbatore: கோவையில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

கோவை: Traffic has been changed to avoid traffic jams in Coimbatore. கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வழித்தடங்களை பயன்படுத்துமாறு மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, அவினாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் 10.10 வரை கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலை துறையின் சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பாலத்திற்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்கும் திட்டத்தில், தற்போது 276 தூண்கள் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டன. இதனைத்தொடர்ந்து லட்சுமி மில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஜி.கே.என்.எம். சிக்னல் சந்திப்பு பகுதியில் தூண்கள் அமைக்கப்படுவதால் அந்த வழித்தடம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜி.கே.என்.எம். சாலையிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அண்ணா சிலை சந்திப்பு நோக்கி செல்ல வேண்டுமானால், லட்சுமி மில் சிக்னல் வரை சென்று திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது.

அதேபோல், லட்சுமி மில் சிக்னல், அரசு விருந்தினர் மாளிகை சாலையிலிருந்து வருபவர்கள் அண்ணா சிலை சந்திப்புக்கு சென்று திரும்பி ஜி.கே.என்.எம். சாலைக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து, அவினாசி சாலையின் போக்குவரத்தில் காவல் துறை சில மாற்றங்களை செய்துள்ளது.

லட்சுமி மில் சிக்னலில் இருந்து ஜி.கே.என்.எம். சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பி.ஆர்.எஸ். மைதான நுழைவு வாயில் முன்பு ரோட்டின் நடுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இடைவெளியில் திரும்பி செல்ல வேண்டும். இந்த வழியில் இருசக்கர வாகனம் மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்.

பெரிய வாகனங்கள் வழக்கம்போல் அண்ணா சிலை சந்திப்புக்கு சென்று திரும்பி வர வேண்டும். இதேபோல், ஜி.கே.என்.எம். சந்திப்பில் இருந்து வருபவர்கள் அரசு விருந்தினர் மாளிகை ரோடு சந்திப்பு அருகே திரும்பி அரசு விருந்தினர் மாளிகை ரோட்டிற்கோ அல்லது அண்ணா சிலை சந்திப்புக்கோ செல்லலாம்.

அதேநேரம் அரசு விருந்தினர் மாளிகை ரோட்டில் இருந்து லட்சுமி மில் சிக்னல் நோக்கி வருபவர்களுக்கு இதில் திரும்ப அனுமதியில்லை.