Tasmac immediate shutdown: மண்ணெண்ணெய் கேனுடன் அதிரவைத்த பெண்கள்; டாஸ்மாக் உடனடி மூடல்

செஞ்சி: The Tasmac liquor store was immediately closed due to the protest of the villagers near Melmalayanur next to Gingee. செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே கிராம மக்களின் போராட்டத்தால் டாஸ்மாக் மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அடுத்த நீலாம்பூண்டியை அருகே உள்ள கடலி கிராமத்தில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலத்தின் மையப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் வழியாகச் செல்லும் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோா்களிடம், மது குடிப்பவர்கள், மது குடித்து விட்டு தொடர்ந்து அத்துமீறி இடைஞ்சல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதன் காரணமாக அந்த டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி கடலி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் மண்ணெண்ணெய் கேனுடன் டாஸ்மாக் மதுக் கடை முன் திரண்டனா்.

மேலும் டாஸ்மாக் கடையை திறக்க வந்த ஊழியா்களிடம் கடையைத் திறக்கக் கூடாது, மீறி திறந்தால் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என எச்சரிக்கை விடுத்தனா்.

தகவலின் பேரில், அங்கு விரைந்த வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்பாபு, மேல்மலையனூா் வட்டாட்சியா் அலெக்ஸாண்டா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அக்டோபா் மாதத்தில் இந்த மதுக் கடையை அகற்றி விடுவோம் என்று கூறினா்.

இதனை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தினர், இப்போதே கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் உறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து உடனடியாக இந்த மதுபானக் கடையை மூடப்படுவதாக வட்டாட்சியா் அறிவித்தாா்.

இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் வீடு திரும்பினர்.