Mullaiperiyar dam water level:140.75 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்

தேனி: Mullaiperiyar dam water level reached 140.75 feet. கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு நீர் மட்டம் 140.75 அடியை எட்டியுள்ளது.

மாண்டஸ் புயல் வலுவிழந்த நிலையிலும், இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று பகல் முழுக்க மழை இல்லை. ஒரு சில நேரங்களில் லேசான வெயில் முகம் தெரிந்தது. இன்று காலை 4 மணி முதல் அதிக ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசியது.

மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனி அரண்மனைப்புதுாரில் ஒரு மி.மீ., வீரபாண்டியில் 3.2 மி.மீ., பெரியகுளத்தில் 1.4 மி.மீ., மஞ்சளாறில் 2 மி.மீ., சோத்துப்பாறையில் 2 மி.மீ., போடியில் 1.4 மி.மீ., பெரியாறு அணையில் 11 மி.மீ., தேக்கடியில் 4.6 மி.மீ., சண்முகாநதியில் 1.2 மி.மீ., மழை பெய்தது.

மழையால் அணைகளுக்கு நீர் வரத்து ஓரளவு உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு நீர் மட்டம் 140.75 அடியை எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் வரத்து உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை பெய்த மழையால் நேரம் செல்ல, செல்ல நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 64.53 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 941 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 769 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 126.38 அடியாகவும், சண்முகாநதி நீர் மட்டம் 44 அடியாகவும் உள்ளது. இன்று காலை முதல் வானம் அடர்ந்த மேகமூட்டத்துடன் உள்ளது. இன்றும் மாவட்டத்தில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. மாவட்டத்தில் மழை பெய்தாலும், காய்கறிகள் பறிக்கும் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சபரிமலை சீசன் என்பதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும் வரத்தும் தேவைக்கு ஏற்ப இருப்பதால் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.