Kanda Shashti Festival at Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர்: Kanda Shashti Festival begins at Tiruchendur Murugan Templeதிருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா கோலாகலாமாக தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டிவிழா கோலகலாமாக தொடங்கியது. இந்த கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வு வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் வீடாகப் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலின் நடை இன்று அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜை நடத்தப்பட்டு கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதனையடுத்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இன்று நண்பகல் யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

ஆனால், இன்று மாலை சூரியகிரகணம் நிகழ்வதன் காரணமாக மாலை 4 மணிக்கே திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சூரியகிரகணம் முடிந்ததும் இன்று மாலை மாலை 6.45க்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. அதன்பின் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சுவாமி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது.

இந்த சூரசம்ஹார நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டின் சூரசம்ஹாரம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதன் காரணமாக கூடுதலாக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் வருவதற்கு வசதியாக பல்வேறு இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து 31ம் தேதி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடத்தப்பட்டு கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.