Edappadi Palaniswami about judgment: தர்மம், நீதி வென்றுள்ளது.. மிகுந்த மகிழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி

சென்னை: Edappadi Palaniswami has said that he welcomes the historic judgment of the Madras High Court Division Bench today.. சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் இன்று வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட விதிகளின்படி, 11.7.2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறேன்.

உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள், நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.; நம்மையெல்லாம் வாழவைத்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.

இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது.

கடந்த 23.6.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும், 11.7.2022 அன்று கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் இன்று (2.9.2022) வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான கழகத்தின் அடிப்படைத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.