Defraud farmers of Rs 62.64 lakh: விவசாயிகளிடம் ரூ.62.64 லட்சம் பணத்தை ஏமாற்றிய வியாபாரி கைது

கள்ளக்குறிச்சி: Trader arrested for defrauding farmers of Rs 62.64 lakh. கள்ளக்குறிச்சியில் ரூ.62.64 லட்சம் மதிப்பு 8000 நெல், எள் மூட்டைகளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2021ம் வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் த/பெ சாமூண்டி என்பவர், சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட விவசாய பொருட்களை நேரடி கொள்முதல் செய்து, மொத்தமாக தஞ்சாவூர் மாவட்டம், புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் த/பெ சின்னதுரை என்பவரிடம் விற்றதாகவும், அதற்குண்டான பணத்தை தராமல் ஏமாற்றிவருவதாக புகார் பெறப்பட்டது. உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பகலவன் விவசாயிகளிடம் ஏமாற்றிய நபரை கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பரமணியனுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தபோது சங்கராபுரம் தாலுக்கா, பூட்டை கிராமத்தில் ஆனந்த் என்பவர் விவசாயிகளிடம் நெல் கொள்ளமுதல் செய்ய வந்த போது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சங்கராபுரம் பகுதிகளில் விவசாயிகளிடம் சுமார் 8000 நெல் மற்றும் எள் மூட்டைகள் கொள்முதல் செய்து அதற்குண்டான பணம் சுமார் 62,64,628 ரூபாய் தராமல் ஏமாற்றி வந்தது தெரியவருகிறது.

மேலும் அவர் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பிவிட்டுள்ளனர். இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் இதேபோன்று விவசாயிகளிடம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவருகிறது. பின்பு விசாரணை முடித்து குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் சுமார் 62,64,628 ரூபாய் பணத்தை ஏமாற்றிய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.