Anbumani praises the Tn government: மாண்டஸ் புயலில் பாதிப்புகளை தவிர்த்த அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னை: Anbumani Ramadoss praises the government for avoiding the effects of Cyclone Mandous மாண்டஸ் புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்த்த தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்.

அதே நேரத்தில் கடலோரப்பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. கடல் அரிப்பின் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகள் இடிந்துள்ளன.

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களின் வலைகள் முழுமையாக நாசமடைந்து விட்டதால் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை அரசே சரி செய்து தர வேண்டும்; மீனவர்களுக்கு புதிய வலைகளை வாங்கித் தர வேண்டும். கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசின் செலவில் கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.