3 children drown in river near Tiruvannamalai: திருவண்ணாமலை அருகே 3 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு; தாய் ‘சீரியஸ்’

திருவண்ணாமலை: 3 children drown in river near Tiruvannamalai: திருவண்ணாமலை அருகே தற்கொலைக்கு முயன்ற தாய் 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பரசுராமன் (30). இவரது மனைவி அமுதா (27). இவர்களுக்கு நிலவரசு (5), குறளரசு (4) ஆகிய மகன்கள், யாஷினி (7 மாதம்) மகளும் உள்ளனர். இவர்களில் நிலவரசு அதே ஊரில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய 3 பேரையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்தார்.அங்கு அமுதா திடீரென தனது 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்துள்ளார்.

ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் தனது 3 குழந்தைகளும், அமுதாவும் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அமுதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவலின் பேரில், வாணாபுரம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் விரைந்து சென்று 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில், அமுதாவுக்கும் அவரது கணவர் பரசுராமனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பூர்செக்கடி பகுதியில் உள்ள அமுதாவின் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்ற பரசுராமன் அங்கேயே தங்கியதாக தெரிகிறது.

Also Read: Rs.3.09 Crores worth Gold seized: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.09 கோடி மதிப்பு 6.5 கிலோ தங்கம் பறிமுதல்

இந்நிலையில் கடும் மனஉளைச்சலில் இருந்த அமுதா, பள்ளியில் இருந்த மூத்த மகன் நிலவரசுவை பாதியிலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த மற்ற 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Also Read: Congress clash in Trichy protest: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் மோதல்.. பரபரப்பு

அமுதா சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவு திரும்பிய பின்னர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். வாணாபுரம் பகுதியில் ஆற்றில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.