Houses damaged by sea erosion: மாண்டஸ் புயல் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கடல் அரிப்பால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

விழுப்புரம்: More than 10 houses damaged by sea erosion in Villupuram district. விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடலோர கிராமங்களில் கடல் அரிப்பால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுவட்டாரத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பிள்ளைச்சாவடியில் ஒரு பகதியில் தமிழகத்தை சேர்ந்ததாகவும், மற்றொரு பகுதியில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்ததாகவும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தில் ஏற்படும் புயலால் கடல் கொந்தளிப்புடனும், ஆக்ரோஷத்துடனும் காணப்படும். இதனால் அலைகள் கரையை வேகமாக வந்து மோதியவாறு செல்லும். மேலும் கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் பிள்ளைச்சாவடி உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அத்துடன் வழக்கத்தை விட 100 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் வெளியேறியது.

இதனால் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டு இருந்த வீடுகள் மீது கடல் அலைகள் ஆக்ரோஷமாக வந்து மோதின. கடல் கொந்தளிப்புக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மீனவர் சங்க கட்டிடம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதை சுதாரித்துக்கொண்ட மக்கள், வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர். மேலும் கடல் அரிப்பை தடுப்பதற்காக நடப்பட்டு இருந்த 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் கடல் அலை அடித்துச்சென்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து 861 குடும்பத்தை சேர்ந்த 763 ஆண்கள், 1178 பெண்கள், 557 குழந்தைகள் என 2 ஆயிரத்து 498 பேர் 49 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.