Edappadi Palaniswami arrested: சென்னையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது

சென்னை: AIADMK members including Edappadi Palaniswami arrested in Chennai. சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிலவிய கூச்சல் குழப்பத்தால், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் அப்பாவு அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரிலிருந்து வெளியேறி சபாநாயகருக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க சபாநாயகர் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தளவாய் சுந்தரம், ஆதிராஜராம் உள்ளிட்டோர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஆனால், அதிமுக உண்ணாவிரத் போராட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால், தடையை மீறி அதிமுகவினர் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கே.சி.கருப்பண்ணன் ஆகியோருடன் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது, திமுக ஆட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தை கைவிடுமாறு காவல் துறையினர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.