PM Modi: நாட்டிற்கு வலிமையான எதிர்க்கட்சி வேண்டும் – பிரதமர் மோடி

pm-modi
நாட்டிற்கு வலிமையான எதிர்க்கட்சி வேண்டும்

PM Modi: உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதலாவதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ரூ.80,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்வில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “உலகின் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரலாறு காணாத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு கடந்தாண்டு குவிந்துள்ளது. நாட்டின் மூலதன செலவிற்கு வரலாறு காணாத அளவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 16 முதல் 20 சதவீத மக்கள் தொகையை உத்தரப் பிரதேசம் கொண்டுள்ளது. எனவே நாட்டின் மாபெரும் வளர்ச்சியை உத்தரப் பிரதேசத்தால் தான் சாத்தியப்படுத்த முடியும்” என்றார்.

பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சொந்த கிராமமான கான்பூரின் தேஹாத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு மக்களிடம் உரையாற்றினார். அதில், “நான் எந்த கட்சி மீதோ, தனி நபர் மீது விரோதம் கொண்டவன் அல்ல. நாட்டில் பலமான எதிர்க்கட்சி வேண்டும் என நினைப்பவன் நான். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் தான் பிரதான அங்கம். எனவே குடும்ப அரசியலில் இருந்து கட்சிகள் விடுபட்டு, இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எளிமையான கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நபர் கூட நாட்டின் குடியரசு தலைவராகவும், பிரதமராகவும், ஆளுநராகவும், முதலமைச்சராகவும் வர முடியும். வாரிசுக்கு முக்கியத்துவம் தருவது என்பது அரசியில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் காணப்படும் பிரச்னை. இதன் காரணமாக தகுதி வாய்ந்த நபர்கள் பாதிக்கப்படுவார்கள்” என பேசினார்.

இதையும் படிங்க: Karti Chidambaram: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி