LPG price hike : இன்று முதல் சமையல் காஸ் சிலிண்டரின் விலை உயர்வு

எதற்கெல்லாமோ போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் இதற்கான போராட்டத்தை நடத்த முன் வரவேண்டும்

தில்லி : LPG price hike : சமையல் காஸ் சிலிண்டரின் விலை புதன்கிழமை (ஜூலை 6) உயர்ந்துள்ளது. இதனால் ஏழைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமையல் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் புதன்கிழமை முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்படி ஏற்கெனவே இருந்த விலையை விட கூடுதலாக‌ ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.1,053 ஆக உயர்ந்துள்ளது.


5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 18 ஆகவும், 19 கிலோ வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 8.50 ரூபாவாலும் உயர்த்த‌ப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில், தில்லியில் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை ரூ.834.50-ல் இருந்து ரூ.1,003 ஆக உயர்ந்துள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டரின் விலை மே 19-ஆம் தேதி ரூ. 4 உயர்த்தப்பட்டது.

முன்னதாக தில்லியில் நிகழாண்டு மே 7-ஆம் தேதி சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ.999.50 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு முன்னதாக சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ. 949.50 ஆக இருந்தது. மார்ச் 22-ஆம் தேதி வரை ரூ. 949.50 ஆக சமையல் காஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ. 50 உயர்த்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை, தில்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.899.50 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை உயர்வுக்குப் பிறகு, மும்பையில், ஒரு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,052.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,079 ஆகவும், சென்னைவாசிகள் ரூ.1,068.50 செலுத்த வேண்டும்.

சமையல் எரிவாயு விலை குறித்து பெங்களூரைச் சேர்ந்த கௌரம்மா கூறியது: தொடர்ந்து சமையல் எரிவாயு விலை உயர்ந்தால், எங்களைப் போன்ற ஏழை குடும்பங்களுக்கு அதனை சமாளிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. மத்திய அரசு எங்களைப் போன்ற ஏழைகள், நடுத்தரக் குடும்பங்களை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட எரிவாயு சிலிண்டரின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். எதற்கெல்லாமோ போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் இதற்கான போராட்டத்தை நடத்த முன் வரவேண்டும் என்றார்.