Kashmir murders: காஷ்மீரில் அதிகரிக்கும் இந்துக்கள் படுகொலை

jammu and kashmir
காஷ்மீரில் அதிகரிக்கும் இந்துக்கள் படுகொலை

Kashmir murders: ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் எல்லாகுவாய் தெஹாதி வங்கி உள்ளது.

இந்த வங்கியின் மேலாளராக ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் மீது பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த ஆசிரியை ரஜ்னி பாலா (வயது 36) சுட்டு கொல்லப்பட்டார். இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளி கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

காஷ்மீரி பண்டிட்டான இவர் வழக்கம்போல் பள்ளியில் பணிகளை செய்து கொண்டிருந்தபோது, பள்ளி கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் அவரை சுட்டு விட்டு தப்பிச்சென்றனர். ஆசிரியை கொலைக்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீரின் பல பகுதிகளில் பெண்கள் உள்பட பண்டிட் சமூக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கடந்த மே மாதத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட் சமூகத்தின் 2வது நபர் ரஜ்னி பாலா ஆவார்.

கடந்த மாதம் 12ந்தேதி புத்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பட் என்பவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானார். சமீப நாட்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டு கொன்று வருகின்றனர். கடந்த 25ந்தேதி, ஒரு டி.வி. நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டு கொல்லப்பட்டார். காஷ்மீரில் கடந்த மே மாதத்தில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர். இந்நிலையில், இந்துக்களை குறிவைத்து படுகொலை செய்யும் சம்பவத்தின் ஒரு பகுதியாக வங்கி மேலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் இன்று சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: Tulsa medical building: அமெரிக்கா மருத்துவமனையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி